மேட்டுப்பாளையம் அருகே, மின்சார வேலியில் சிக்கி, காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெத்திகுட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது, தனது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் வகையில், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார்.
இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை, நேற்று இரவு முருகேசனின் தோட்டத்தில் நுழைந்து வாழைகளை சேதப்படுத்தியுள்ளது. பின்னர், வனப்பகுதிக்குள் நுழைய முற்பட்டபோது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின் வேலியில் சிக்கி யானை பரிதாபமாக இறந்தது.
இது பற்றி தகவல் அறிந்த, சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர், சட்டவிரோத மின்வேலி குறித்து ஆய்வு செய்து தோட்ட உரிமையாளரான முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே கோவை வனப்பகுதியில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.