சசிகலா டிச. 3ல் விடுதலை? கசியும் தகவல்களால் பரபரப்பு

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, வரும் 3ம் தேதி விடுதலையாவார் என்று பரவும் தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு கைதானார். நீதிமன்ற உத்தரவுப்படி, பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார்.

சசிகலாவின் சிறைவாச காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, சிறை விதிகளின் படி, கடந்த ஆகஸ்ட் மாதமே அவர் விடுதலையாவார் என்று பேசப்பட்டது. ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில், ஜனவரி மாதம் தான் சசிகலா விடுதலை ஆவார் என்று, கர்நாடக சிறைத்துறை தெரிவித்தது.

அதே நேரம், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10.10 கோடி அபராதம் அண்மையில் செலுத்தப்பட்டதால், ஜனவரிக்கு முன்பாகவே வெளியாக அவர் வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இச்சூழலில், சிறையில் உள்ள சசிகலா டிசம்பர் 3ம் தேதி விடுதலையாவார் என்று, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தகவலை சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

அதன்படி, வரும் 3ம் தேதி சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா, திநகரில் உள்ள இளவரசி வீட்டில் தங்குவார்; ஜெயலலிதாவின் நினைவுநாளான டிசம்பர் 5ம் தேதி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, அரசியல் பணிகளை சசிகலா தொடங்குவார் என்றும் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Translate »
error: Content is protected !!