தமிழகத்தில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் இன்று போராட்டம் நடத்தினர். இதன் முடிவில் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து அன்புமணி ராமதாஸ் எம்.பி. கோரிக்கை மனுவை அளித்தார்.
இந்த நிலையில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது. மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும்.
சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.