சென்னையில் அமித்ஷா செல்லும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு: பந்தோபஸ்து பணியில் 7 ஆயிரம் போலீஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருவதை ஒட்டி அவர் தங்கும் நட்சத்திர ஓட்டல் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. 7 ஆயிரம் போலீசார் பந்தோபஸ்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (21.11.2020) தமிழகம் வருகிறார். நாளை காலை 10.50 மணிக்கு டில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் அவர் மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருகிறார்.

விமான நிலையத்தில், மத்திய மந்திரி அமித்ஷாவை தமிழக பாஜ நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். பின்னர், அங்கிருந்து காரில் புறப்படும் அமித்ஷா, ஆர்ஏ புரத்தில் உள்ள லீலா பேலஸ் ஏழு நட்சத்திர ஓட்டலுக்கு மதியம் 1.30 மணிக்கு வருகிறார். அங்கு தங்கும் அவர் பின்னர் மாலை 4.15 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு மீண்டும் ஓட்டல் லீலா பேலசுக்கு அமித்ஷா வருகிறார். அங்கு இரவு 7 மணிக்கு தமிழக பா.ஜ மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். இரவு 8.30 மணிக்கு பா.ஜ.க. உயர்மட்டக் குழுவினருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அன்று இரவு ஓட்டலில் தங்கும் அவர் நாளை (22.11.2020) காலை 10 மணிக்கு காரில் புறப்பட்டு விமான நிலையம் சென்று 10.15 மணிக்கு தனி விமானத்தில் டில்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அமித்ஷாவின் வருகையையொட்டி சென்னை விமான நிலையம், கலைவாணர் அரங்கம் மற்றும் அமித்ஷா தங்கும் நட்சத்திர ஓட்டல் உள்பட முக்கியப் பகுதிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அமித்ஷா சென்னை வருவதை ஒட்டி சென்னை நகர பாதுகாப்புப் பணியில் 3 கூடுதல் கமிஷனர்கள், 4 இணைக்கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்புப் பணிக்கு சுமார் 7 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது. அமித்ஷா தங்கும் நட்சத்திர ஓட்டல், கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர். போக்குவரத்தில் பெரிய அளவு மாற்றம் எதுவம் இல்லை என்றும், அமித்ஷா வரும் நேரத்தில் மட்டும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!