*சென்னையில் 14 இடங்களில் தி.மு.க., போட்டியிட முடிவு? சென்னையை மீண்டும் தி.மு.க., கோட்டையாக மாற்றும் வகையில் வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
*அமமுக தேர்தல் அறிக்கையை வரும் 12 ஆம் தேதி டிடிவி தினகரன் வெளியிடுகிறார்.
*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தலைமையில் இன்று (09.03.2021) 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் பற்றி மாவட்ட கழக செயலாளர்களுடன் அவரச ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக அவைத்தலைவர் திரு.டாக்டர்.V.இளங்கோவன் அவர்கள், கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு.அழகாபுரம்.R.மோகன்ராஜ் அவர்கள், கழக துணை செயலாளர்கள் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், திரு.ஏ.எஸ்.அக்பர், திருமதி.பேராசிரியர்.S.சந்திரா அவர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
*சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்துள்ளார். தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செ.கு.தமிழரசன் விளக்கம் அளித்துள்ளார்.
*கடையநல்லூர் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்க திமுக ஒப்புதல் அளித்துள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் மீதமுள்ள 2 தொகுதிகள் இன்று மாலை இறுதியாகும். வாணியம்பாடி, ஆம்பூர், சிதம்பரம், பாபநாசம் ஆகியவற்றில் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்று மாலை இறுதியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
*எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த மறுப்பால் எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர்
*சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். 25 இடங்களாவது ஒதுக்கக் கோரிய நிலையில் 13-ஐ ஒதுக்க அதிமுக முன்வந்தது. குறைந்த தொகுதிகளை ஏற்க தேமுதிக தயக்கம் காட்டி வந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்
*தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், 23 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பில் தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பள்ளி செல்லவேண்டிய சிறுவர்கள் குடும்பம் காக்க உழைக்கச் சென்று விட்டார்கள். தமிழகம் ஏழ்மையில் தகிப்பதன் அடையாளம் இது என குறிப்பிட்டுள்ளார்
*மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலை 8 கட்டங்களாக நடத்த தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
*தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்தனர்
*தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரதமர் பொதுவானவர் என்பதால் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
*வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
*அதிமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்க தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துல ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து விஜயகாந்த் எடுக்கும் முடிவை ஏற்பதாக மாவட்ட செயலாளர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளை கேட்ட தேமுதிக தற்போது சொற்ப தொகுதிகளை ஏற்க முன்வந்துள்ளது