தடுப்பூசி வினியோகம் தாமதம்; பிரதமர் மோடி அறிவிப்புக்காக காத்திருப்பு

மாநில முதல்மந்திகளுடன் உரையாடிய பிறகு, தடுப்பூசி வினியோகம் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரிக்கிறது.

கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த இரு தடுப்பூசிகளையும் நாடு முழுவதும் கொண்டு சென்று எப்படி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்பதற்காக மத்திய அரசு விரிவான திட்டங்களை வகுத்து உள்ளது. அதன்படி 2 தடவை நாடுமுழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த தடுப்பூசி ஒத்திகைகள் வெற்றிகரமாக நடந்தன.

இந்த தடுப்பூசிகள் வினியோகத்துக்காக மத்திய அரசு சுமார் 500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. தடுப்பூசி வினியோகத்துக்காக விமான படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தடுப்பூசி வினியோகம் நேற்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்களும் தயார் நிலையில் இருந்தன.

ஆனால் என்ன காரணத்தினாலோ நேற்று தடுப்பூசி வினியோகம் தொடங்கப்படவில்லை. வருகிற 11-ந் தேதி மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி தடுப்பூசிகள் வினியோகம் தொடர்பாக மாநில முதல்மந்திரிகளுடன் காணொலி காட்சியில் உரையாட உள்ளார். அதன்பிறகுதான் தடுப்பூசி தொடர்பான முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தடுப்பூசி வினியோகம் 2 நாட்கள் தாமதமாகி உள்ளது. திங்கட்கிழமைக்கு பிறகுதான் தடுப்பூசிகள் நாடுமுழுவதும் எடுத்துச்செல்லப்படும் என்று தெரிய வந்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!