கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப்பாடமாக தமிழ் மறுக்கப்படும் வழக்கில், தமிழகத்தில் தமிழ் மொழி கற்கக்கூடாதா என்று, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ், விருப்பப்பாடமாக மட்டுமே கற்பிக்கப்படுவதாகக்கூறி, தமிழக கட்டிட தொழிலாளர் மத்திய சங்கத்தைச் சேர்ந்த பொன்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.
மனுவில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படாது, 6-ம் வகுப்பிருந்து ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மேல் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படும்.
இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டம், இலவச கல்வி உரிமை சட்டம், தமிழக அரசின் தமிழ் கற்றல் விதி ஆகியவற்றிற்கு எதிரானது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கற்றல் விதிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படும் என திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிரஞ்சு, ஜெர்மன், வங்கமொழி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம் ஆனால், தமிழகத்தில் தமிழ் மொழி கற்கக்கூடாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பிரதமரோ, தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிறார். ஆனால், இந்தி, ஆங்கிலம் மட்டுமே படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக தமிழ் உள்ளது என்பதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அத்துடன், விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கை நாளைய தினத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.