தமிழகத்தில் ரயில்வே மற்றும் தேர்தல் ஆணைய ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும்

சென்னை,

தமிழகத்தில் விரைவில் ரயில்வே மற்றும் தேர்தல் ஆணைய ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்து தற்போது இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் புதன்கிழமை (நேற்று) 4,651 சுகாதாரப் பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டது. இவற்றுடன் சேர்த்து மொத்தமாக 19,097 பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,09,143 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 462 நோயாளிகளை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாள் முடிவில், இன்னும் 4,192 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வைரஸ் தொற்று காரணமாக 6 பேர் இறந்ததாக அரசு தெரிவித்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர் , திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.

147 புதிய வழக்குகளுடன் சென்னை முதலிடத்திலும், கோவையில் 38 வழக்குகளும், திருவள்ளூர் 35 மற்றும் செங்கல்பேட்டை 33 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 20 க்கும் குறைவான வழக்குகள் பதிவாகியுள்ளன, 26 மாவட்டங்களில் ஒற்றை இலக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

சென்னையில் மட்டும் 1,604 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 500 க்கும் குறைவான நோயாளிகள் உள்ளனர். இவற்றுடன் சேர்த்து தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,46,480 ஆகவும், பலி எண்ணிக்கை 12,438 ஆகவும் உள்ளது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நோய்த்தடுப்பு பிரிவு இணை இயக்குநர் டாக்டர் வினய் குமார்நாங்கள் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தேர்தல் துறைக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகளை பதிவு செய்யத் தொடங்குவோம். அப்போது தான் அவர்களுக்கு விரைவில் தடுப்பூசிகளை நாங்கள் வழங்க முடியும்என்று கூறினார்.

 

Translate »
error: Content is protected !!