ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் திருமாவளவனை முற்றுகையிட்டு கோஷமிட முயன்ற பாரதிய ஜனதா கட்சியினருகும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மனுநீதி புத்தகத்தில் பெண்கள் குறித்து குறிப்பிட்டிருந்தது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய சில கருத்துகளுக்கு பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அருகே கந்தசாமியூரில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்க, தொல். திருமாவளவன் சென்றிருந்தார். செல்லும் வழியில் அவரை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர், பெண்களை இழிவுபடுத்தியதாக கூறி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கூறி கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையே பாஜகவினர் திரண்டு கூட்டமாக நிற்பதை கேள்விப்பட்டு அங்கு, ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் வருகை தந்தனர். இதனால், இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, வாகனங்கள் மீது கற்கள் மற்றும் செருப்பை வீசப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரிடமும் பேசி, மோதல் சூழலை தவிர்க்கச் செய்து, திருமாவளவனை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, பா.ஜ.க.வை சேர்ந்த 15 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.