சென்னை,
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நெறிமுறைகள் காரணமாக, அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடவோ, அரசு சார்பில் நிகழ்ச்சிகளை நடத்தவோ அனுமதியில்லை.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை நெறிமுறைகள் வருமாறு:-
தனிநபர்கள் அல்லது கட்சிகள் ஜாதி மற்றும் மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சுகளிலோ, செயல்களிலோ ஈடுபடக் கூடாது. மற்ற கட்சிகளை விமர்சிக்கும் போது அது அவர்களது கொள்கைகள் மற்றும் கடந்த கால செயல்பாடுகளை மையப்படுத்தியே இருக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது தொண்டர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் இருக்கக் கூடாது.
வாக்குகளைப் பெறுவதற்காக ஜாதி மற்றும் மத ரீதியான உணர்வுகளைத் தூண்டக் கூடாது.தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் இதர வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்தக் கூடாது.
தனி நபர்களின் கட்டடங்கள், நிலங்களில் அவர்களது அனுமதியில்லாமல் கட்சிக் கொடிகளையோ, பேனர்கள், போஸ்டர்களோ ஒட்டக் கூடாது. தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு முன்பாக, உள்ளூர் காவல் நிலையத்தில் அதுகுறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், தேதி, நேரம் ஆகியவற்றை தெரிவிப்பது முக்கியம்.
அரசின் வாகனங்கள், அரசு இயந்திரம், அரசுப் பணியாளர்கள் ஆகியோரை தனிப்பட்ட தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தக் கூடாது.அரசு விடுதிகள், ஓய்வு விடுதிகளில் தங்குவதற்கு ஆளும் கட்சியினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அனுமதிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்துக்கான இடங்களாக அவற்றை மாற்றக் கூடாது.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மக்களைக் கவரும் வகையிலான புதிய அறிவிப்புகளை வெளியிட அரசுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், அரசு தொடர்பான பொது நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. தீ விபத்து போன்ற அசம்பாவித செயல்களால் பாதிக்கப்படுவோருக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று நிதி உதவிகளை மாநில அரசுகள் அளிக்க எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல் நடத்தை நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இனி அரசின் திட்டங்கள், புதிய அறிவிப்புகள், புதிய உத்தரவுகளை அரசு வெளியிடக் கூடாது. ஆனாலும் தேர்தலுக்கு முன்பாகவே அறிவித்ததுபோல் காட்டி, தேர்தல் அறிவிக்கப்பட்ட ஓரிரு நாட்களுக்குப் பிறகு அறிவிப்புகளை வெளியிடுவதாக புகார்கள் வருகின்றன.
இதை முடிவு கட்டுவதற்காக தேர்தல் ஆணையம் ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி, டி.வி.யில் தேர்தல் அறிவிப்பு செய்தி வெளியாகி 2 மணி நேரத்திற்குள், அரசாணை பதிவு ஆவணத்தில் குறிக்கப்பட்டுள்ள கடைசி அரசாணை எண்ணுக்கு கீழ் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் பேனாவினால் கோடு போட வேண்டும். அதை படம் எடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியும். தவறான குற்றச்சாட்டுகளை எழுப்ப முடியாது.