தீவிர புயலாக மாறும் ‘நிவர்’! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் தகவல்… முதல்வர் அவசர ஆலோசனை

தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல், நாளை தீவிர புயலாக மாறி, நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மற்றும் மிகபலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் என்ற புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நிவர் புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், இன்று மாலை தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நிவர் புயல் நாளை (24.11.2020) அதிதீவிர புயலாக வலுப்பெறும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நிவர் புயல் 25ஆம் தேதி பிற்பகல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும்.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் வரும் 25 ஆம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று, பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதற்கிடையே புயல் காரணமாக, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதேபோல், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களிலும் வழக்கத்தைவிட கடல் சீற்றமாக உள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதில், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே. திரிபாதி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் மாற்று இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. ரேஷன் கடைகளுக்கு போதிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் அச்சுறுத்தல் காரணமாக சென்னை – தஞ்சை, தஞ்சை – சென்னை உள்ளிட்ட 6 ரயில் சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!