பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம்: ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.70,000 சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு – கவர்னர் அறிவிப்பு

 சென்னை,

பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.70,000 சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கவர்னர் தெரிவித்தார்.

நடப்பு ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடரை கவர்னர் இன்று துவக்கி வைத்து உரையாற்றினார்.

நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளிலுள்ள ஏழை மக்களுக்குத் தரமான வீட்டு வசதிகளை வழங்குவதற்கு தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. ஊரகப் பகுதியில் வீடற்ற ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் கான்கிரீட் கூரையுடன் கூடிய ஒரு வீடும், நகர்ப்பகுதியில் வசிக்கும் வீடற்ற ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடும் கட்டித் தரப்படும்.

மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் கட்டி முடிக்கும் தறுவாயிலிருக்கும் 2,57,925 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க உதவும் வகையில், பிரதம மந்திரியின் வீட்டுவசதித் (ஊரகம்) திட்டத்தின் கீழ், வீடு ஒன்றிற்கு சிறப்பு கூடுதல் ஒதுக்கீடாக 70,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் வீட்டு வசதித் (ஊரகம்) திட்டத்தின் கீழ், வீடு ஒன்றிற்கு, இந்திய அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலை 1.20 லட்சம் ரூபாய்க்குப் பதிலாக, தமிழ்நாட்டில் வீடு ஒன்றிற்கு மொத்தச் செலவு 2.40 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், மாநில அரசின் பங்கு 1.68 லட்சம் ரூபாய் ஆகும். நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டுவசதிகளை மேம்படுத்துவதற்காக, ‘தமிழ்நாடு நகர்ப்புற திறனுக்கேற்ற வீட்டுவசதி மற்றும் உறைவிடக் கொள்கைவகுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டுவசதிகளை ஏற்படுத்துவதற்காக, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து, அரசு நிதியுதவியை திரட்டியுள்ளது. விதிகளை எளிமைப்படுத்தியதாலும், அதிகாரங்களைப் பகிர்ந்தளித்ததாலும், திட்ட வடிவமைப்பிற்கு அனுமதி வழங்கும் நடைமுறை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் திட்டத்தின் மூலம், 39,939 மனைப்பிரிவுகள் மற்றும் 21,86,101 மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளன. பெருவாரியான மக்களின் கோரிக்கையின்படி, விடுபட்டுள்ள இனங்களுக்கு, 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் கால அளவு 28.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில், தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முன்னணி வகிக்கின்றன. மத்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் வெளிப்புற நிதியுதவி முகமைகள் மூலம் நிதியளிக்கப்பட்ட பல்வேறு நகர்ப்புற உட்கட்டமைப்புத் திட்டங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நகர்ப்புறங்களில் நீர்நிலைகளை மீள்நிரப்புவதற்காக, கழிவுநீரை மறுசுழற்சி செய்து, மறுபயன்பாடு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது இயங்கி வரும் இரண்டு 45 எம்.எல்.டி. மூன்றாம் நிலை எதிர்மறை சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையங்களைத் தவிர, கூடுதலாக பெருங்குடி ஏரியையும் போரூர் ஏரியையும் மீள்நிரப்புவதற்காக, பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில், 10 எம்.எல்.டி. திறனுடைய இரண்டு மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

Translate »
error: Content is protected !!