புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியிலிருந்து நீக்கம்

புதுச்சேரி,

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பொதுப்பணித் துறை அமைச்சரும், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான .நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

.நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் பாரதீய ஜனதாவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி காங்கிரசிலிருந்து பிரிந்து என்.ஆா். காங்கிரசை உருவாக்கிய என்.ரங்கசாமி கடந்த 2011-ல் ஆட்சியை கைப்பற்றினாா். 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் ரங்கசாமியை தோற்கடிக்க அவரது நெருங்கிய உறவினரான .நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றியும் பெற்றது.

ஆனால், தோ்தலுக்குப் பின்னா் கவர்னர் கிரண் பேடியை சமாளிக்க வேண்டுமென்ற அடிப்படையில் மூத்த அரசியல்வாதியான வே.நாராயணசாமிக்கு முதல்வா் பதவியை காங்கிரஸ் மேலிடம் வழங்கியது. அப்போது, கடும் அதிருப்தியடைந்த நமச்சிவாயத்தை காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தி, அமைச்சரவையில் 2-வது இடம் வழங்கியது. மேலும், புதுவை காங்கிரஸ் தலைவராகவும் தொடா்ந்து பதவி வகித்து வந்தாா்.

பொதுப்பணி, கலால் துறை உள்பட 19 துறைகள் நமச்சிவாயத்திடம் உள்ளன. ஆனால், ஆட்சியிலும், கட்சியிலும் முதல்வா் நாராயணசாமி கையே ஓங்கியது. மக்களவைத் தோ்தலுக்குப் பின்னா் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், நமச்சிவாயத்திடமிருந்த மாநில காங்கிரஸ் தலைவா் பதவி பறிக்கப்பட்டு, காரைக்காலைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் .வி.சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது.

இது, முதல்வா் நாராயணசாமி, அமைச்சா் நமச்சிவாயம் ஆகியோரிடையே பனிப்போராக வெடித்தது. கடந்த 6 மாதங்களாகவே அமைச்சா் நமச்சிவாயம் ஓரங்கப்பட்ட நிலையில் இருந்தாா். இதனால், அவா் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவாா் என்று தகவல் வெளியானது.

இதை உறுதி செய்யும் வகையில், அமைச்சா் நமச்சிவாயம் தனது ஆதரவாளா்களுடன் சனிக்கிழமை இரவு வில்லியனூரிலும், நேற்று புதுச்சேரியிலும் ஆலோசனையில் ஈடுபட்டாா். இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் .வி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நமச்சிவாயம் நீக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!