நிவர் புயல் மற்றும் பலத்த மழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியானதுமே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக, உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன.
அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபோதும், எதிர்பாராமல் நிவர் புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் என, மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.
புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கன்று ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும்.
புயல் காரணமாக 302 குடிசை வீடுகள் முழுமையாகவும் 1,439 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும் என்று, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.