பெரும் எதிர்பார்ப்பு… தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்குகிறார்

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் பிரசாரத்திற்காக இன்று களமிறங்குவது அக்கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயகாந்த் என்றால் வாய்ஸ்.. பன்ச்.. டயலாக் டெலிவரி.. அரசியல்வாதி விஜயகாந்த் ஆன பிறகும் இவை தான் அவரது ஹைலைட். 2011ல் விஜயகாந்த் மேற்கொண்ட பிரசார வீடியோக்களை யூடியூபில் போட்டுப் பாருங்கள். அப்படியே மெய் மறந்து போவீர்கள்.

ஆனால், உடல்நிலை குன்றியதன் காரணமாக, விஜயகாந்த் இப்போது சுத்தமாகஆக்டிவ்அரசியலில் இல்லை. மைத்துனர் எல்.கே.சுதீஷ், மனைவி பிரேமலதா, மகன் விஜய பிரபாகரன் தான் அக்கட்சியின் முக்கிய மூன்று முகங்களாக உள்ளனர்.

இந்த நிலையில் தான், விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரத்திற்கு களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் நீடித்திருந்த தேமுதிக, தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி, கடும் அதிருப்தியோடு கூட்டணியில் இருந்து வெளியேறியது. 2019 மக்களவை தேர்தல் வரை தேமுதிக மீதிருந்த நம்பிக்கை, இப்போது மற்ற கட்சிகளுக்கு இல்லை என்பதே இந்த புறக்கணிப்பின் வெளிப்பாடு.

காரணம், போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தேமுதிக அப்படி அடிவாங்கியிருந்தது. இதை அதிமுகவே வெளிப்படையாக தெரிவித்தது. இதனால், அரசியலில் தங்களுக்கு ஜுனியரான அமமுகவிடம் ஐக்கியமாகும் சூழல் தேமுதிகவுக்கு ஏற்பட்டது. தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியாது என்பதால், தினகரனிடம் 60 சீட் வாங்கி களம் காண்கிறது தேமுதிக.

இந்த நிலையில் தான், கட்சியின் முக்கிய தூணாக வலம் வந்த எல்.கே.சுதீஷ் கொரோனா தொற்று காரணமாக இப்போது ஓய்வில் இருக்கிறார். இதனால், பல இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஏற்கனவே உற்சாகமின்றி காணப்பட்ட தொண்டர்கள், மேலும்என்னய்யா இப்படி ஆச்சுஎன்று புலம்பிக் கொண்டிருந்தனர். இந்த சூழலில் தான், விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று (மார்ச்.24) முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இன்று மாலை கட்சி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து திருத்தணியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

அதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தொகுதி தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து பஜார் சாலையிலும், திருத்தணி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பொதட்டூர்பேட்டையிலும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். விஜயகாந்தால் கண்டிப்பாக தனது பழைய சிம்மக் குரலில் பேச முடியாது. இருந்தாலும், இந்த பிரசாரத்திற்கு என்றே அவருக்கு சில நாட்களாக தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இதில், மகன் விஜய பிரபாகரன் அப்பாவுக்கு துணையாக இருந்து பயிற்சி கொடுத்திருக்கிறார். குறைவாக பேசினாலும், அதிமுகவை விமர்சிப்பது தான் விஜயகாந்த் ஸ்பீச்சின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்க கோரியபின், அதிமுகவை விட்டு விளாசுவதே விஜயகாந்தின் டார்கெட்டாம்.

 

 

Translate »
error: Content is protected !!