பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க கவர்னருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்தது சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதனிடையே பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரைத்தது. இதன் மீது தமிழக கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார். இந்நிலையில், கவர்னர் தாமதம் செய்வதால் சுப்ரீம் கோர்ட்டே தன்னை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை, ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வக்கீல் நடராஜன் வாதம் செய்தார்.
இந்நிலையில் நேற்று ஆஜரான மத்திய அரசு தலைமை வக்கீல் துஷார் மேத்தா, “அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி மாநில அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுவிக்க 2018-ம் ஆண்டு செப்டம்பரில் முடிவெடுத்தது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கவர்னர், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என சட்ட நிபுணர்கள் கூறினர்.
7 பேரை விடுவிப்பதில் கவர்னருக்கு உடன்பாடு இல்லை எனில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பலாம் என கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னர் இன்னும் 3 நாட்களில் முடிவு எடுப்பார்” என மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தமிழக கவர்னர் முடிவெடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.