மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் 48 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதையே போராடும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில், போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசை சுப்ரீம் கண்டித்ததுடன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதிகள் குழுவை நியமிக்க நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் கடந்த 48 நாட்களாக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 60 விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.
விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 8 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் அதில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. வரும் 15-ம் தேதி 9-வது கட்டப் பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் இந்த வேளாண் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், அமல்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். ஒருவேளை மத்திய அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்த முடியாது என்றால், அந்தச் சட்டங்களுக்குத் தடை விதிக்க நேரிடும் எனவும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது.