கர்நாடகாவின் ராமநகர் மாவட்டத்தில் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகா தாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகா தாது அணை திட்டத்திற்கு ரூ .9,000 கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி கோரி கர்நாடக அரசு திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
ஆனால் இந்த திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மேகா தாது அணை கட்டுவதை எதிர்க்க வேண்டாம் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். முதல்வர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதினார். அதில், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கூறியிருந்தார்.
இந்த சூழலில், மேகா தாது அணை திட்டத்தை கைவிடுவது குறித்து பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக கூறியுள்ளார். முன்னதாக, கர்நாடக சட்ட அமைச்சர் அனைத்து தடைகளையும் மீறி அணை திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.