யாஸ் புயலால் தரைமட்டமான ஒடிசா: ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட மோடி

யாஸ் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய ஒடிசா சென்ற பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று சேத இடங்களை பார்வையிட்டு முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் புயல் சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

வங்கக்கடலில் உருவானயாஸ்புயல் நேற்று முன்தினம் ஒடிசா, தாம்ரா துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பலத்தகாற்றுடன் கன மழை பெய்தது. இதனால் இரு மாநிலங்களிலும் பொது சொத்துக்கள், விவசாய நிலங்கள் கடும் சேதமடைந்தன. 4 பேர் உயிரிழந்த நிலையில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புயல் சேதங்களை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று ஒடிசா சென்றார். ஒடிசா கவர்னர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்னாயக், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரதாப் சாரங்கி ஆகியோர் விமானநிலையத்தில் பிரதமர் மோடியை நேரில் வரவேற்றனர்.

மேலும் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் புயல் சேதங்கள் குறித்த விவரங்களை பிரதமர் மோடியிடம் தெரிவித்தனர். கூட்டத்திற்கு பின் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாநிலத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

 

Translate »
error: Content is protected !!