வரும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளது குறித்து, தனது மவுனத்தை கலைத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்தை தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று, அவர் ஆய்வு செய்தார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, ‘காங்கிரஸ்- திமுக ஆட்சியில் இருந்தபோது தான், 2ஜி வழக்கில் ஆ. ராசா சிறைக்கு சென்றார். பாரதிய ஜனதா அரசு அவரை சிறைக்கு அனுப்பியது காங்கிரஸ் தான். 2ஜி வழக்கு விசாரணை முடிந்த பிறகு ஆ.ராசா எங்கு இருப்பார் என்பது எல்லாருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.
நடிகர் ரஜினி ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர், முதலில் நடிகர் ரஜினிகாந்த் கட்சியை பதிவு செய்யட்டும்; அதன் பிறகு இதுபற்றி பதில் தருகிறேன். ரஜினிகாந்துடன் கூட்டணி அமையலாம் என ஓபிஎஸ் கூறியது, அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நேற்று கருத்து தெரிவிக்காமல் நழுவிய முதல்வர் பழனிச்சாமி, இன்றும் எந்த பிடியும் கொடுக்காமல், பட்டும்படாமல் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.