சென்னை,
விஜயகாந்த் வீட்டில் அப்படி என்னதான் நடந்தது. இப்போது வரை தேமுதிகவில் குழப்பம் நீடிக்கிறதே. என்ன காரணம்? விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்தபோதுகூட இப்படி ஒரு இழுபறி கூட்டணிகளில் இருந்ததில்லை.
ஆனால், இந்த முறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கட்சியாகவே தேமுதிக தென்பட்டு வருகிறது. அதனால்தான் பிரேமலதா சொன்ன எந்த பேச்சுமே அதிமுக தலைமையிடம் எடுபடவில்லை. எனினும் தேமுதிகவின் அதிருப்தியை போக்கவும், கூட்டணியை உறுதி செய்யவும், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று பேசினர்.
பாமகவுக்கு ஒதுக்கும் அளவுக்கு சீட் தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்பது தேமுதிகவின் கோரிக்கை.. இதில் இன்னொரு சிக்கலும் தேமுதிகவுக்கு வந்துள்ளதாம். அதாவது பாமக கேட்ட அந்த 23 தொகுதிகள் லிஸ்ட்டில் தேமுதிகவுக்கு சாதகமான தொகுதிகளும் கிட்டத்தட்ட 10-க்கு மேல் உள்ளதாம். இதுதான் இந்த இழுபறிக்கு முக்கிய காரணமாக உள்ளது என தற்போது தெரியவந்துள்ளது.
ஆனால் அதிமுகவை பொறுத்தவரை, மொத்தமே 10 தொகுதிகளைதான் ஒதுக்க முடிவு செய்துள்ளது. வேண்டுமானால் 2 சீட் கூடுதலாக தரலாமே தவிர, மற்றவைகளுக்கு வாய்ப்பில்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது. இது சம்பந்தமான உடன்பாட்டில் கையெழுத்திடவும் டைம் தரப்பட்டிருந்த நிலையில்தான், விஜயகாந்த் வீட்டில் திடீரென ஒரு ஆலோசனை கூட்டம் நடந்ததாம்.
பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டு பேசியுள்ளனர். இந்த கூட்டத்தில் 2 முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாம். ஒன்று, திமுக பக்கம் சாயலாமா என்பது, மற்றொன்று தனித்து போட்டி என்பது..! இதில், திமுக கூட்டணியில் இணைய ஏற்கனவே முயற்சிகள் நடந்த ஒன்றுதான். சுதீஷூக்கு இதில் விருப்பம் என்றாலும், பிரேமலதாதான் இந்தகூட்டணிக்கு ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்லப்பட்டது.
ஏனென்றால், அதிமுக-,பாஜ.க கூட்டணியிலேயே இருந்தால்தான், ராஜ்ய சபா சீட்டை இந்த முறையாவது கேட்டு வாங்கிட முடியும் என்பது பிரேமலதாவின் கணக்காக இருந்தது. அதற்கு பிறகு திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேருமா என்பது குறித்த பேச்சே எங்கும் எழவில்லை. நேற்று இதை பற்றிதான் மறுபடியும் விவாதித்தாக சொல்கிறார்கள். இது உண்மையா என்று தெரியவில்லை.. ஒருவேளை உண்மையான தகவலாக இருந்தால், திமுக இதை நிச்சயம் பரிசீலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஆலோசனையின் இறுதியில், தனித்து போட்டி என்பது போல சுதீஷ், ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டுள்ளார்.. முதல்வர் விஜயகாந்த் என்று குறிப்பிட்டிருப்பதை பார்த்தால், ஏற்கனவே பிரேமலதா சொன்னதுபோல சிங்கம் சிங்கிளாகவே வருமோ? என்ற சந்தேகம் எழுகிறது.. மற்றொரு புறம், இது அதிமுகவுக்கான மறைமுக எச்சரிக்கையா என்றும் கேட்க தோன்றுகிறது.
சில நாட்களுக்கு முன்புகூட தேமுதிக தனித்து போட்டி என்று விஜயபிரபாகரன் சொல்லி இருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. எனினும் இது உண்மை என்று நம்பி ஆங்காங்கே தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்… விருப்ப மனு முடிந்து, 6-ம் தேதி நேர்காணலையும் நடத்த போகிறார்கள்.. ஆனால், கூட்டணியா? தனித்து போட்டியா? என்பதை அதிகாரப்பூர்வமாக இதுவரை தேமுதிக அறிவிக்கவில்லை.
தனித்து போட்டி என்ற முடிவு என்றால், அதை பலர் பரவலாக வரவேற்கவே செய்கின்றனர்.. அப்போதுதான் சொந்த கட்சியின் பலம் தேமுதிகவுக்கு தெரியும் என்பதும், இனியாவது தங்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணரக்கூடும், மேலும் தங்கள் சுயமரியாதையை இழக்காமல் பார்த்து கொள்வார்கள் என்றும் கருத்துக்கள் கூறப்படுகின்றன.
மற்றொரு பக்கம், 30 சதவீதம் வாக்குகள் வைத்திருக்கும் கட்சிக்கூட இந்த மாதிரி பேசுவதில்லை.. பேசுவதில்லை. வெத்துவேட்டு அறிக்கைகள், மிரட்டல்கள், அரைகுறை நடவடிக்கைகளை இத்துடனாவது தேமுதிக நிறுத்தி கொள்ளட்டும், கூட்டணி என்று பெரிய கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டு, அவர்களின் செலவிலேயே ஓட்டு உட்பட மற்றதையும் வாங்கும் போக்கை இனியாவது தேமுதிக கைவிட வேண்டும் என்றும் அறிவுரைகள் வலம் வர தொடங்கி உள்ளன.
ஒருவேளை திமுகவுடன் இணைவார்களா? அல்லது ஏற்கனவே சசிகலாவை ஏகத்துக்கும் பிரேமலதா புகழ்ந்து வைத்துள்ளதால், அமமுகவுடன் இணைவார்களா? அல்லது சுதீஷ் சொன்னதுபோல தனித்தே போட்டியா? தெரியவில்லை.. எனினும் கூட்டணிக்கு இன்றுதான் கடைசி நாள் என்பதால், நிச்சயம் ஏதாவது ஒரு நல்ல முடிவு எட்டப்படும்.. பார்ப்போம்..!