விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் எதிரொலியாக மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு, பாதுகாப்பு பணிகளுக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்ற பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் சேவையை உறுதி செய்ய ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ரெயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் ரெயில்களின் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.
ரெயில் மறியலை முன்னிட்டு திக்ரி எல்லை, பண்டிட் ஸ்ரீராம் சர்மா, பகதூர்கார் சிட்டி மற்றும் பிரிகேடியர் ஹோசியார் சிங் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன என டெல்லி மெட்ரோ ரெயில்வே கழகம் தெரிவித்து உள்ளது. டெல்லியில் நங்லோய் ரெயில் நிலையத்திலும், அரியானாவில் பல்வால் ரெயில் நிலையத்திலும், உத்தர பிரதேசத்தின் காசியாபாத் ஜங்சனிலும் பாதுகாப்பு பணிகளுக்காக போலீஸ் படை குவிக்கப்பட்டு உள்ளது.