வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருமா என்ற கேள்விக்கு, பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியன தயாராகி வருகின்றன. அதேபோல், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும், கூட்டணியை தொடர்வதா, வேண்டாமா என்ற யோசனையில் உள்ளன.
இந்த சூழலில், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை செம்மஞ்சேரி பகுதியில் மழை நீர் தேங்கிய குடியிருப்புகளை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, நிவர் புயல் தடுப்பு விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் நன்றாக இருந்ததாக பாராட்டினார். தாழ்வான பகுதியாக உள்ள செம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை அரசு சரி செய்ய வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.
சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, தற்போது வரை பாஜக அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக நீடிக்கிறது. எனினும், வரும் சட்டசபைத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஜனவரி மாதத்தில் பொதுக்குழு கூடி முடிவு செய்யும். இறுதிமுடிவை விஜயகாந்த் வெளியிடுவார் என்றார்.