சென்னை,
சேலம், ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலின் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சின்னத்துரை என்பவர் போட்டியிடுவார் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் களைகட்டியுள்ளது. வேட்புமனுதாக்கல் துவங்கியுள்ளது.
திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்பட்ட பிறகு, திமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தது. இதன் பிறகு ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதி ஒரு தனி தொகுதியாகும். இங்கு ஜீவா ஸ்டாலின் என்ற பெண், திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில்தான் சீட் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், ஜீவா ஸ்டாலின், ஜாதி தொடர்பாக சில குழப்பங்கள் ஏற்பட்டன. அவர், ஆதிதிராவிடர் இல்லை என்று புகார்கள் எழுந்தன. ஏனென்றால் தந்தை ஒரு ஜாதியை சேர்ந்தவர், தாய் இன்னொரு ஜாதியை சேர்ந்தவர். அவர்கள் ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள், என்பதால் அவரை ஆதிதிராவிடர் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதுதான் விமர்சனம்.
நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக இதே போல சர்ச்சை எழுந்து. தேர்தல் ஆணையத்திற்கு சிலர் புகார் மனு அனுப்பினர். இந்த நிலையில்தான் ஆத்தூர் தொகுதிக்கு சின்னத்துரை என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 82.
தேர்தல் நேரத்தில் அல்லது தேர்தலுக்குப் பிறகு சட்ட சிக்கல்கள் எதுவும் வந்துவிடக்கூடாது.. இதன் மூலமாக ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறைந்து விடக்கூடாது என்பதால் திமுக தலைமை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.