அதிரடி திருப்பம்…. நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு…!

நெல்லை,

நெல்லை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் பால் கண்ணன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நெல்லை சட்டசபைத் தொகுதிகளில் அதிமுக பாஜக கூட்டணியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் பால் கண்ணன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றபோது அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்துள்ளார் தேர்தல் அதிகாரி பால் கண்ணனின் வேட்புமனுவை முன்மொழிந்த 10 பேரில் மூன்று பேர் அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் இல்லை என்பதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிதெரிவித்துள்ளார். இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் மாற்று வேட்பாளர் மகேஷ் கண்ணன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மகேஷ் கண்ணனை விடவும் பால்கண்ணன் செல்வாக்கு உள்ளவர் என்பதால் அதிமுக ஓட்டுக்களை அவர்தான் அதிகமாக பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவரது வேட்புமனு ஏற்கப்படவில்லை என்பதால் நயினார் நாகேந்திரன் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சிக்கு, நெல்லை தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த கட்சியின் சார்பில் அழகேசன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால் 10 நபர்கள் முன்மொழிவதற்கு பதிலாக 8 நபர்கள் மட்டுமே முன்மொழிந்து இருந்தனர். இதையடுத்து அழகேசன் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேவர் சமுதாய வாக்குகளையும், சமத்துவ மக்கள் கட்சி நாடார் சமூக வாக்குகளையும் பிரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இருவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் இடையே நேரடி போட்டி நிலவும் தொகுதியாக நெல்லை தொகுதியை மாற்றியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதனிடையே வேட்புமனுவை தள்ளுபடி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பால் கண்ணன், தர்ணா நடத்தினார். அதே போல, அழகேசனும் தர்ணா நடத்தினார். காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றினர்.

 

Translate »
error: Content is protected !!