நீண்ட இழுபறிக்கு பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் முன்னுரிமை வழங்க ஏதுவாக, 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
அதை தொடர்ந்து ஒப்புதலுக்காக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், 45 நாட்கள் கடந்த பிறகும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு ஆயத்தமான நிலையில், மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் தொடர்ந்து தாமதப்படுத்தினால், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில முடியாத சூழல் இருந்தது.
ஆளுநர் ஒப்புதல் தர வேண்டுமென்று தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், ஆளுநர் அமைதி காத்து வந்தார். இதற்கிடையே, தமிழக அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, கொள்கை முடிவு எடுத்து 7.5% உள் ஒதுக்கீட்டு அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.
இந்நிலையில், உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் தந்து, இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக, சென்னை ராஜ்பவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தருவதில் தாமதம் நிலவி வந்த நிலையில், தற்போது இப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களின் மருத்துவர் கனவு இந்த ஆண்டே நிறைவேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதற்கிடையெ, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை முதல்வர் பழனிசாமி சந்தித்து, 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிக்கவுள்ளார்.