அமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் ரத்து – விமானிக்கு மாரடைப்பு

திருச்சி:

திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை சென்னைக்கு செல்லவிருந்த தனியாா் விமானத்தின் விமானிக்கு ஏற்பட்ட திடீா் மாரடைப்பால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் செய்யவிருந்தார். கடந்த இரு தினங்களாக நிவர் புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலை 8.15 மணிக்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் 68 பயணிகளுடன் வந்தது. பின்பு 8.45 க்கு இந்த விமானம் சென்னை புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக 58 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சுமார் 42 பயணிகள் மும்பை மற்றும் டெல்லிக்கு தொடர் பயணம் செய்ய இருந்த காரணத்தினால் ஹைதராபாத் செல்லும் விமானம் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் இருந்த பயணிகள் மாலை சென்னை நோக்கி செல்லவிருக்கும் விமானத்திற்கு மாற்றுப் பதிவு செய்து கொண்டனர். இதனால் பயணிகள் அவதியுறும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், இண்டிகோ விமானத்தை இயக்க இருந்த பைலட்டுக்கு திடீரென (நெஞ்சு வலி) உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக அந்த பைலட் திருச்சியில் உள்ள தனியார் (காவேரி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக தான் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

Translate »
error: Content is protected !!