அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளான தொழிலதிபர் தூக்குப் போட்டு தற்கொலை – கமல் ட்வீட்

சென்னை,

அரசு அதிகாரிகளுக்கு மாதந்தோறும் லஞ்சம் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளான தொழிலதிபர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை எண்ணூர் பகுதியில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன் தமிழக அரசு அதிகாரிகளின் லஞ்ச கெடுபிடிகள் தாங்கமுடியாமல் இளம் தொழில் முனைவர் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபரின் பெயர் விக்ரம், வயது 30 சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 1-வது தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகிறது. மணலி அருகே விச்சூர்பகுதியில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.60 லட்சம் முதலீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விக்ரம் தொடங்கினார்.

விக்ரமிடம் இருந்து அரசு துறை அதிகாரிகள் பலர் மாதந்தோறும் லஞ்சம் வாங்கியுள்ளனர். இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு அரசுத்துறை அதிகாரிகள் மீண்டும் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். உள்ளூர் அரசியல்வாதிகளும் லஞ்சம் கேட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் கூட லஞ்சம் கொடுத்துள்ளார். வருமானத்தில் இருந்து பெரும் பகுதி லஞ்சமாகவே போனதால் விக்ரம் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். 40 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டது. கடந்த 12ஆம் தேதி தன்னிடம் லஞ்சம் பெற்றஅதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்களின் பட்டியலை முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார் விக்ரம். 15ஆம் தேதி எண்ணூர் தாழங்குப்பத்தில் உள்ள பயன்படுத்தப்படாத பொது கழிவறையில் விக்ரம் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விக்ரமின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “தமிழக அரசு அதிகாரிகளின் லஞ்ச கெடுபிடிகள் தாங்கமுடியாமல் எண்ணூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவர் விக்ரம் முதல்வருக்குக் கடிதம் எழுதிவிட்டு பொது இடத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் நெஞ்சம் பதறுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!