அர்ஜுனமூர்த்தி “ரோபோ” சின்னம் பெற்ற கதை..?

சென்னை,

நான் கேட்டது செருப்பு, துடைப்பம் சின்னம்தான். ஆனால் தேர்தல் ஆணையம்தான் ரோபோ சின்னத்தை கொடுத்தது என இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ரஜினி கட்சி தொடங்காததை அடுத்து மாற்றத்தை தருவதாக அர்ஜுனமூர்த்தி கடந்த மாதம் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற ஒன்றை தொடங்கினார். இந்த கட்சியின் தேர்தல் அறிக்கையும் சின்ன அறிமுக விழாவும் நேற்று பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

கட்சி சின்னமான ரோபோ நவீன தொழில்நுட்பம் மூலம் பேச வைத்து, நடக்க வைத்து அறிமுகப்படுத்தினார். இதன் பின்னர் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், அந்த தேர்தல் அறிக்கையில் உள்ளதை செயல்படுத்துவது சாத்தியம் என்ற வாக்குறுதியையும் அளித்தார்.

இதையடுத்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டனர். அப்போது ஊழலை எப்படி ஒழிப்பீர்கள் என கேட்டனர். அதற்கு அவர் ஊழலை ஒழிக்க முடியாது. தனிப்பட்ட ஒருவரின் ஆசை ஒழியும் வரை ஊழல் இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஆனால் ஊழலை இல்லாமை ஆக்குவது எளிதான விஷயம். உதாரணமாக பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ வாங்கக் கூட அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு குழந்தை பிறந்தவுடன் அதை அந்த மருத்துவமனை மருத்துவர் குழந்தையின் பெற்றோர் விவரங்கள் குறித்து ஒரு சாப்ட்வேரில் பதிவு செய்தால் செல்போனுக்கே சான்றிதழ் வந்துவிடும், பின்னர் அதை பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

ரஜினி நடித்த ரோபோ படத்தின் சின்னத்தை எப்படி பெற்றீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அர்ஜுனமூர்த்தி கூறுகையில், நான் கிடைத்தது ரஜினியின் பாக்கியம் என கூறினார். அதுவே எனக்கு பெரிய பாக்கியமாக இருந்தது. அந்த வகையில் அவர் நடித்த ரோபோ சின்னம் கிடைத்ததும் எனது பாக்கியமே. நான் செருப்பு, துடைப்பம், செல்போன் ஆகியவற்றைதான் தேர்தல் ஆணையத்திடம் கேட்டேன்.

செருப்பு சின்னமும், துடைப்பம் சின்னமும் யாருக்கோ கொடுத்துவிட்டார்களாம். செல்போன் சின்னத்தை பெறலாம் என நினைத்தபோது அதுவும் கால்குலேட்டரும் ஒரே மாதிரி இருந்தது. அதனால் அதை நானே தவிர்த்துவிட்டேன். பின்னர்நீங்கள்தான் புதுமையை புகுத்த விரும்புகிறீர்களே, ரோபோவை ஏன் சின்னமாக எடுத்துக் கொள்ளக் கூடாது, ஏன் ரோபோ பிடிக்காதா என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டனர்.

உடனே நான் ரோபோவை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா என கேட்டுவிட்டு அதை பெற்றுக் கொண்டேன். இப்படித்தான் எனக்கு ரோபோ சின்னம் கிடைத்தது. ரஜினியின் நட்பு, ரஜினி நடித்த படத்தின் கதாபாத்திரம் கிடைத்தது எல்லாமே தானாக அமைந்தது என அர்ஜுனமூர்த்தி தெரிவித்தார். பின்னர் விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு விவசாயிகள் மீது தவறு சொல்லாமல் மத்திய அரசு மீது தவறு சொல்லாமல் டிப்ளமேட்டிக்காக பதில் அளித்தார்.

Translate »
error: Content is protected !!