இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகப் போட்டியில் விளையாடி, இரண்டு முக்கிய 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய தமிழக வீரர் நடராஜனுக்கு, முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கான்பெரா நகரில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக வீரர் நடராஜன் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். இப் போட்டியில் அபாரமாக பந்து வீசி, 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுத்தார்.
சேலத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது கடும் முயற்சியால், உழைப்பால் இந்திய அணியில் இடம் பிடித்து, இன்று தனது முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்! வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் என்று கூறியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தனது வாழ்த்தில், தன்னுடைய திறமையான பந்துவீச்சால் முதல் போட்டியில் இரண்டு விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்து மேலும் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் துவக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமிழக வீரர் நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.