ஆடைமீது தொட்டு பாலியல் தொந்தரவு செய்வது போக்சோ கீழ் வராது: மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திய உச்சநீதிமன்றம்

மும்பை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதி மன்றம் இன்று நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, வீட்டிற்கு ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், 39 வயது சதீஷ் என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, செசன்ஸ் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா விசாரித்து வந்தார். அந்த வழக்கில், செசன்ஸ் கோர்ட் விதித்திருந்த 3 ஆண்டு தண்டனையை ரத்து செய்தார்.

மேலும் அந்த நீதிபதி, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன், ஒருவரை ஆடை இல்லாத நிலையில், உடலோடு உடல் தொடுவது மட்டுமே போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும்.

ஆனால், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன், ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது. அது துன்புறுத்தல் மட்டுமே என்று கூறி, குற்றவாளிக்கு ஓராண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பு, சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், தீர்ப்பு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்துள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் இதுதொடர்பாகப் பதிலளிக்க, நாக்பூரிலுள்ள உயர்நீதிமன்ற கிளைக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!