அரசியல் ஆதாயத்திற்காக மு.க. ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்; அரசுக்கு பெருகும் ஆதரவை கண்டு அவர் அச்சத்தில் உள்ளார் என்று, முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மாணவர்களின் நலனுக்காக அதிமுகவுடன் இணைந்து போராடவும் தயார் என்று, அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் அவர்களுக்கு உரிய அளவுக்கு மருத்துவ இடம் கிடைப்பதில்லை. எனவே தான், அரசு பள்ளியில் படித்த நான், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து, கடந்த 21.3.2020 அன்று சட்டசபையில் 110 விதியின் கீழ், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவ படிப்பு பயில உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தேன்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கலையரசன் ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சரவை ஒப்புதல் பெற்று, 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக 18.9.2020 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
ஏழை எளிய மாணவர்களுக்கு சம நீதி வழங்க இது வழிவகுக்கும் என்பதை உணர்ந்து ஆளுநர் இதற்கு விரைந்து ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டுமென அமைச்சர்கள் குழு, ஆளுநரை கடந்த 20ம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது, இது குறித்து ஆய்வு செய்து விரைவாக முடிவு செய்வதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளில் மொத்தம் 3,050 மருத்துவ இடங்களை உருவாக்கிய தமிழக அரசை பார்த்து, நீட் தேர்வு என்ற விஷயத்தை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து மாணவர்களுக்கு துரோகம் இழைத்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், “ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை” என்று கூறுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர் நீலிக்கண்ணீர் வடிப்பது, மக்களின் மனங்களில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாது. வெண்ணை திரண்டு வரும் நேரத்தில், தங்களால் தான் எல்லாம் நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் எண்ணத்துடன் ஆளுநருக்கு கடிதம், அறிக்கைகள் என எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கைகள், “அரசியல் ஆதாயம் தேடும் செயல்” மட்டுமே என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர் என்று முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.