ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம், ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இந்நிலையில் தமிழக அரசின் அவரச சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். தடையை மீறி விளையாடினால் ரூ.5,000 அபராதம் விதிக்கவும், 6 மாதம் சிறை தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.