மதுரையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், “இலவசமாக இதை தருகிறேன், அதை தருகிறேன் என்கிறார்கள், அந்த திட்டங்களை நிறைவேற்ற மாதம் 4,000 கோடி தேவைப்படும்.
தமிழகம் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் கடனில் உள்ளபோது எப்படி இலவசமாக வாஷிங்மெஷின் கொடுக்க முடியும்? மதுரையில் உண்மையான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டுவர அமமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியனர் ஓட்டுக்கு ரூ.6000 முதல் ரூ.10,000 வரை அளித்தனர். தபால் வாக்குக்காக காவலர்களுக்கு ரூ.2,000 கொடுத்து திமுகவினர் தேர்தல் ஆணையத்திடம் சிக்கினர். மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உள்ஒதுக்கீடு செய்யப்படும், அதுவே சரி. திமுகவை எதிர்த்து தமிழகமே உள்ளது. கருத்து கணிப்பு என்ற மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் யார் பக்கம் என்பது தேர்தல் முடிவில் தெரியும். தமிழகம் முழுக்க திமுகவினர் வெற்றிபெறுவோம் என கூறிக்கொண்டு காவல்துறையினருக்கு எதற்காக பணம் கொடுக்கின்றனர்? அற்பர்களுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது போன்று இரு கட்சிகள் உள்ளனர். அவர்களுக்கு இப்போது இருக்கும் ஒரே ஆதரவு காந்தி தாத்தா தான்.
பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது என்று நிரூபிக்க நீங்கள் சரியாக சிந்தித்து வாக்களியுங்கள். துரோகம் வீழப்போகிறது. தர்மம் எப்படியும் வெற்றிப்பெறும். அம்மாவின் உணமையான தொண்டர்களை அமமுக கூட்டணியில் ஆட்சியில் அமர வைக்க வேண்டும்” எனக் கூறினார்.