ஆர்.கே நகரில் ஏன் போட்டியிடவில்லை..? – டிடிவி தினகரன் விளக்கம்

சென்னை,

ஆர்.கே நகரில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

அமமுகதேமுதிக இடையில் நேற்று தொகுதி பங்கீடு உடன்படிக்கை எட்டப்பட்டது. அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டதால் 42 வேட்பாளர்களை அமமுக திரும்ப பெற்றுள்ளது.

அமமுக சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். ஆர். கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் இந்த முறை கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் ஆர்.கே நகர் குறித்து பேசிய டிடிவி தினகரன், ஆர்.கே நகரில் நான் போட்டியிட்டது ஒரு விபத்து . தலைவர்கள் இடம் மாறி போட்டியிடுவது வழக்கம்தான். எல்லா தலைவர்களும் இடம் மாறி மாறி போட்டியிடுவது வழக்கம்தான். நான் போட்டியிட வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆர். கே நகரில் நான் போட்டியிட வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். எனக்கு அது சம்பந்தம் இல்லாத தொகுதிதான். ஆனாலும் நான் அங்கே போட்டியிட்டேன்.தேர்தலில் வெற்றியும் பெற்றேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை நான் பெரிய குளம் போன்ற வேறு வேறு தொகுதிகளில்தான் கவனம் செலுத்தி வந்தேன். பின்னர் அவரின் தொகுதியிலேயே போட்டியிட வேண்டிய கட்டாயம். அமமுகவை வழி நடத்தும் நபராக இந்த தேர்தல் எனக்கு முக்கியமானதாக இருந்தது. என்னை மீண்டும் ஆர். கே நகரிலும் இன்னொரு தொகுதியிலும் சேர்த்து போட்டியிட சொன்னார்கள். ஆனால் நான்தான் இரண்டு தொகுதி எல்லாம் வேண்டாம்.

தேவையில்லாமல் இடைதேர்தல் எல்லாம் வரும். ஒரு தொகுதியே போதும் என்றே முடிவு செய்துவிட்டேன். ஆர்கே நகரில் வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். நான் ஆர்கே நகரில் போட்டியிடாமல் போனதற்கு பயம் காரணம் இல்லை. இப்போது கோவில் பட்டியில் எனக்கு நல்ல வெற்றிவாய்ப்பு உள்ளது என்று தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!