இடஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சூழலில், முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து அன்புமணி மனு அளித்தார்.
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்க வந்த அக்கட்சியினரை, பெருங்களத்தூரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சிலர், ரயில் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பாமகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னையில் தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
இதற்கு மத்தியில், சென்னை பல்லவன் இல்லம் அருகே நடந்த போராட்டத்தில் பா.ம.க.வின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்றார்.
அதன் பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அன்புமணி சந்தித்தார். அப்போது, 20 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான மனுவை அவரிடம் அளித்தார். இந்த சந்திப்பின்போது, பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, 40 ஆண்டுகளாக போராடியும் 20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஆகவே, பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி இடஒதுக்கீடு கேட்டு சென்னையில் இன்று அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
ஆனால், வரும் வழியில் எங்கள் தொண்டர்கள் தடுக்கப்பட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தினோம். முதல்வரை சந்தித்து மனு அளித்தோம். அவர் நல்ல முடிவை எடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.
இடஒதுக்கீடு போராட்டம் என்பது அரசியலுக்காகவோ, தேர்தலுக்காகவோ நடக்கவில்லை. வன்னியர் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக சித்தரிக்க வேண்டாம். நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள். யாரோ சிலர் செய்வதை வைத்து பாமகவும், வன்னியர்களும் வன்முறையாளர்கள் என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டாம் என்று அன்புமணி தெரிவித்தார்.-