சென்னை,
விஜய் சைக்கிளில் வந்த வந்த ஓட்டுப்போட்ட சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.. இது சம்பந்தமான ட்வீட்களை பிரபலங்களும், ரசிகர்களும் தெறிக்க விட்டு வருகின்றனர். இதனால், அரசியல் களத்தில் ஒரு அதிர்வு ஏற்பட்டுள்ளது.
காலையில் இருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.. 7 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இப்போது வெயில் ஆரம்பித்துவிட்டதால், வெயிலுக்கு முன்பாக காலையிலேயே வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்… அந்த வகையில் அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் காலையிலேயே தங்களின் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இதில் விஜய்யும் தனது வாக்கை பதிவு செய்தார்.. நீலாங்கரை வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்றார்.. மாஸ்க் அணிந்து சென்றுள்ளார்.. விஜய் சைக்கிளில் சென்றதை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதைச் சற்று எதிர்பாராத பொதுமக்களும், அவரது ரசிகர்களும் அவருக்கு பின்னாடியே வேக வேகமாக வந்தனர்.. இதனால், திரும்பி செல்லும்போது, சிக்கலாகிவிடும் என்று தெரிந்த விஜய், ஓட்டுப்போட்டுவிட்டு, வீட்டுக்கு பைக்கில் சென்றார்..
அப்போதும் ரசிகர்கள் அவரை பின்னாடியே விரட்டி கொண்டு போய் செல்பி எடுக்க முயன்றனர். விஜய் சைக்கிளில் சென்ற வீடியோவும் வாக்குச் சாவடியில் வாக்களித்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இப்போது விஜய் ஏன் சைக்கிளில் சென்றார் என்ற விவாதம் கிளம்பி உள்ளது.. உலகம் முழுக்க வெப்பமயமாதல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது… ஏற்கனவே பெட்ரோல், டீசலை தவிர்த்துவிட்டு சைக்கிள் ஓட்டுவது நல்லது என்ற மெசேஜ் விஜய்யால் தரப்பட்டுள்ளது என்கிறார்கள் ஒரு தரப்பினர்.
அதேபோல, சைக்கிள் ஓட்டியபடி வந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் விஜய் என்றும், பெட்ரோல் டீசல் போன்றவற்றை தவிர்ப்பது இந்த உலகிற்கு நல்லது என்பதை உணர்த்தவே, பச்சை கலரில் டீ சட்டை அணிந்து வந்தார் என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில், பாஜகவுக்கு அரசை சுட்டிக்காட்டவே இப்படி சைக்கிளில் வந்தார் என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்… எதனால் விஜய் சைக்கிளில் சென்றார் என்ற சந்தேகத்துக்கு விடை கிடைக்கும் முன்பேயே, பாஜகவின் குஷ்பு முந்திக் கொண்டு வந்து, இதை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த முறை தேர்தலில், பாஜக கடுமையான அதிருப்தியை சம்பாதித்துள்ளது.. 2019 தேர்தலைவிட சற்று கூடுதலாக மக்கள் கோபத்தில் உள்ளனர்.. இதற்கு முக்கிய காரணம் விலைவாசியும், பெட்ரோல் டீசல் உயர்வும்தான்.. பாஜக மீதான கோபம்தான், அதிமுக கூட்டணி மீதும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் சொல்லி வந்தனர்… ஏற்கனவே விஜய் மீதான வருத்தம், ரெய்டு நடவடிக்கை பாஜ தரப்பில் பாய்ந்துள்ள நிலையில், இன்றைய சைக்கிள் விஷயமும் பாஜகவை மறைமுகமாக விமர்சிக்கக்கூடிய நிகழ்வாக இருக்குமோ என்ற ரீதியில்தான் இது பார்க்கப்பட்டு வருகிறது.