இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் 3-வது தடுப்பூசி..?

ஸ்புட்னிக்வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது.

சென்னை,

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

அதுபோல கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்தன. பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது.

இதுவரை சுமார் 11 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 2-வது கட்ட தடுப்பூசி போடும் பணி நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இதுதவிர முதல் கட்ட தடுப்பூசியை இன்னமும் ஏராளமானோர் போடாமலேயே உள்ளனர்.

இந்தநிலையில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து இருப்பதால் சில மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவசர கால பயன்பாட்டுக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்வி தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவினர் நேற்று டெல்லியில் கூடி ஆலோசித்து ஸ்புட்னிக்வி தடுப்பூசிக்கு அனுமதி கொடுத்தனர்.

இன்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பும் ஸ்புட்னிக்வி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது. இதன் மூலம் இந்தியாவில் பயன்படுத்தப்பட இருக்கும் 3-வது தடுப்பூசி என்ற நிலையை ஸ்புட்னிக்வி தடுப்பூசி பெற்றுள்ளது. தற்போது இந்தியாவில் ஸ்புட்னிக்வி தடுப்பூசி தயாரிக்கப்படவில்லை.

ரஷியாவில் மட்டுமே இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 59 நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. கொரோனாவை தடுப்பதில் 91.6 சதவீதம் அளவுக்கு இந்த தடுப்பூசி வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இந்த தடுப்பூசியை வைத்திருந்து பயன்படுத்த முடியும்.

 

Translate »
error: Content is protected !!