இந்த இரண்டு கட்சி வேட்பாளர்கள் தவிர வேறு யாரும் எங்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கவில்லை -மக்கள் வேதனை

கோவை,

காங்கிரஸ், ம.நீ.ம. வேட்பாளர்களைத் தவிர வேறு யாரும் எங்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கவில்லை என்று கோவை அம்மன்குளம் ஹவுசிங் யூனிட் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மன் குளம் ஹவுசிங் யூனிட்டில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதியை பார்வையிட்ட கமல்ஹாசன், வீதி வீதியாகச் சென்று அடிப்படை கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து வீதி வீதியாகச் சென்று மக்களிடையே பேசி வாக்கு சேகரித்த கமல்ஹாசன் தான் வெற்றி பெற்றால் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார்.

இந்தநிலையில், கமல்ஹாசன் பார்வையிட்டுச் சென்ற பின்னர் கடந்த ஓரிரு நாட்களாக மாநகராட்சியினர் அவசர அவசரமாக அப்பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவது, கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த பணிகள் முறையாகவும், முழுமையாகவும் மேற்கொள்ளப்படாமல் அரைகுறையாக செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர், மேலும் தூர்வாரப்படும் சாக்கடைக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் வழித்தடங்களிலேயே விட்டுச் சென்று விடுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

அம்மன் குளம் புதிய ஹவுஸிங் யூனிட் பகுதியில் சுத்தம் செய்யும் பணி ஓரளவு மேற்கொள்ளப்பட்டுள்ளது, அதன் இன்னொரு பகுதியான பழைய ஹவுசிங் யூனிட்டில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக சரி செய்யப்படாமல் இன்னும் பழுதடைந்த நிலையிலேயே இருப்பதால் மழைக் காலங்களில் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கும் அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவித்தனர்.

இதே பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இன்னும் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் கழிவுநீர் கால்வாய்களின் ஓரத்திலேயே குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அம்மன் குளம் ஹவுஸிங் யூனிட் பகுதியில் ஏறத்தாழ 18 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இவ்வளவு மக்கள்தொகை இருந்தும் அரசு தங்கள் பிரச்சினைகளைக் கண்டுகொள்வதில்லை என்றுகூறும் மக்கள் முறையாக குப்பைகள் அகற்றப்படாதது, கழிவுநீர் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாவதாகவும், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் கூறினர்.

மேலும் முறையான குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். தங்கள் பிரச்சினைகளை கேட்டறிந்த கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மற்றும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆகிய இருவர் மட்டுமே தங்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்ததாகவும், வேறு எந்தக் கட்சினரும் தங்கள் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!