2020ல் இந்தியப் பொருளாதாரத்தை விடவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பட்ஜெட் அறிக்கையில் அதிகளவிலான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்விதமான அறிவிப்பும் இல்லாமல் மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.
இந்த ஏமாற்றத்திற்குப் பின் சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் வகையில், மக்களின் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது மத்திய அரசு.
கொரோனா–வால் ஏற்கனவே கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு இது உண்மையிலேயே பெரும் சுமையாக உள்ளது. இந்நிலையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டி மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மீதான தொடர் விலை உயர்வு மற்றும் மத்திய அரசு கூடுதல் வருமானத்திற்காகப் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதித்து வரும் வரி ஆகியவற்றின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாகச் சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து அனைத்து சேவை மற்றும் பொருட்களில் நிறைந்துள்ளதால் மக்களின் தினசரி வாழ்கையில் விலை வாசி உயர்ந்துள்ளது. உதாரணமாக இன்று ராஜஸ்தான் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் ஹைய் ஆக்டேன் கொண்ட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.34 ரூபாய் விலையை அடைந்துள்ளது.
இதேபோல் சாதாரணப் பெட்ரோல் விலை 99.56 ரூபாயாக உள்ளது. இதேபோல் சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய முக்கியமான நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இந்தியா தனது பெட்ரோல் மற்றும் டீசல் தேவையைச் சுமார் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் வாயிலாகத் தீர்த்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா தற்போது ஓமன், துபாய் மற்றும் பிரிட்டன் சந்தையில் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் காரணத்தால் இந்த 3 சந்தைகளின் சராசரி விலை தான் இந்திய வாங்கும் கச்சா எண்ணெய் விலையாக உள்ளது.
ஜனவரி மாத இறுதியில் இந்திய சந்தையில் வாங்கும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 54.76 டாலராக இருந்த நிலையில் தற்போது 61 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாகவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 12 வாரத்தில் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 8 ரூபாயும், டீசல் விலை 9 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் மும்பையில் இன்று ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 95.46 ரூபாயாகவும், டீசல் 86.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் விலை 95 ரூபாயை தாண்டியுள்ள நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 51 ரூபாய், பங்களாதேஷ்–ல் 76.7 ரூபாய், இலங்கையில் 60.33 ரூபாய், நேபாளத்தில் 68.99 ரூபாய் விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் இந்தியாவில் ஒரு லிட்டர் டீசல் விலை 86 ரூபாயை தாண்டிய விலையில் பாகிஸ்தானில் 52.91 ரூபாயும், பங்களாதேஷ்–ல் 56.01 ரூபாயும், இலங்கையில் 38.97 ரூபாயும், நேபாளத்தில் 58.33 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது.