சென்னை,
இரவெல்லாம் தூங்க முடியாமல் தவித்துள்ளார் டிடிவி தினகரன்.. சசிகலாவின் முடிவு தினகரனை பலவாறாக புரட்டி போட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!
அமமுக என்ற ஒரு கட்சி ஆரம்பித்ததும், அந்த கட்சி ஒரு தேர்தலை சந்தித்தும், ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகியதும் என எந்த விஷயத்தையும் சசிகலா நேரில் பார்த்தது இல்லை. எல்லாமே அவர் ஜெயிலில் இருக்கும்போது நடந்து முடிந்த விஷயங்கள்தான்.
ஒருபக்கம் திவாகரன், மறுபக்கம் தினகரன், இதற்கு நடுவில் புகழேந்தி என மாறி மாறி சசிகலாவுக்கு அரசியல் தகவல்களை சொல்லி கொண்டிருந்தார்கள்.. இதை அடிப்படையாக வைத்துதான் கோபமும், ஆத்திரமும், எதிர்பார்ப்பும் என மாறி மாறி குழம்பி கிடந்தார் சசிகலா.
அமமுக கட்சியை துவங்கியபோதே, தலைமை போஸ்ட்டிங்கை சசிகலாவுக்காக ஒதுக்கி வைத்துவிட்டார் தினகரன். எப்போது ரிலீஸ் ஆகி வந்தாலும், தன் கட்சியை பொறுப்பெடுத்து நடத்துவார் என்றும் நம்பி கொண்டிருந்தார். அதற்காகவே சென்னைக்கு சசிகலா வருகையை பிரம்மாண்டமாக்கினார். ஆனால், அமமுக விஷயத்தில் சசிகலா ஆர்வம் காட்டவில்லை.
சசிகலா தலைமை குறித்து தினகரன்தான் பேட்டி தந்து கொண்டிருந்தாரே தவிர, சசிகலா வாய் திறக்கவில்லை. இந்த முறை சசிகலா பிரச்சாரத்துக்கு வந்தால், அதை வைத்து அமமுகவின் வாக்கு வங்கியை உயர்த்தலாம், தன்னுடையஇருப்பிடத்தை பலப்படுத்தி கொள்ளலாம் என்று பலவாறாக கணக்கு போட்டிருந்தார் தினகரன்.
தன் தரப்பில் மட்டுமல்ல, அதிமுகவிலும் சிலரை அதிகம் நம்பினார். தனக்கு நெருக்கமானவர்கள், “நீங்க வேணும்னா பாருங்க, சித்தி பெங்களூரில் இருந்து வரும்போது, ஓபிஎஸ் சென்னையின் வாசலுக்கே வந்து வரவேற்பார்” என்றார்.
இந்த நிலையில், அதிமுகவும் ஷாக் தந்தது.. சசிகலாவும் ஷாக் தந்துவிட்டார். தேர்தலில் போட்டியிட வேண்டாம், அப்படி போட்டியிட்டால், அதிமுகவை கைப்பற்ற முடியாத என்று தினகரனிடம் சசிகலா எடுத்து சொன்னதாக தெரிகிறது.
இதையும் டிடிவி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இப்போது தலையில் இடியை போட்ட மாதிரி அறிக்கை வெளியிடவும், அப்போதே நொறுங்கி போய்விட்டாராம் தினகரன்.. இதை பற்றி கேட்டால், எல்லாமே அவர் முடிவுதான்.. உங்களுக்கு ஏதாவது வேணும்னா சசிகலாவிடம் போய் கேளுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.. அதாவது, தான் வேறு, சசிகலா வேறு என்பதுபோல அவரது பதில் இருந்து வருகிறது.
ஆனால் பதட்டத்துடன் இருந்திருக்கிறார்.. அறிக்கையை பார்த்தபிறகு தூக்கம்கூட வராமல் தவித்துள்ளார். அந்த ராத்திரி நேரத்திலும் ஆதரவாளர்களை வரவழைத்து ஆலோசித்துள்ளார். சசிகலா இல்லாமல், சசிகலாவை முன்னிறுத்தாமல்தான் இந்த முறையும் தினகரன் தேர்தலை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பகிரங்கமாக விமர்சிக்கவும் முடியாமல், சித்தியை எதிர்க்கவும் முடியாமல் இருகொள்ளி எறும்பாய் தவிக்கும் நிலைதான் தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது. சென்ற எம்பி தேர்தலை போலவே, இந்த முறையும் தென்மண்டல & சாதீய ஓட்டுக்களை நம்பினாலும், திமுகவின் பலத்துக்கு அமமுக ஈடுகொடுக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், சசிகலாவின் அறிவிப்பு வேறு விதமாகவும் பார்க்கப்படுகிறது.
“இதுவரை தினகரனை கேட்காமல் சசிகலா எந்த முடிவும் எடுத்தது இல்லை.. அறிக்கை வெளியிட்டதே தனக்கு தெரியாது என்று தினகரன் சொல்வதெல்லாம் நம்ப முடியவில்லை. இந்த அறிக்கைக்கு பின்னால் ஏதோ ஒரு நாடகம் இருக்கிறது” என்ற கருத்தையும் நம்மால் உதறி தள்ள முடியவில்லை.. அதனால், இனி தினகரன் எடுக்க போகும் நடவடிக்கைகள்தான், சசிகலா அறிக்கையின் உண்மைதன்மையை வெளிக் கொணர போகிறது.. பார்ப்போம்..!