சென்னை,
இருக்கிற தொகுதியெல்லாம் விட்டுவிட்டு டிடிவி தினகரன் ஏன் கோவில்பட்டியில் போட்டியிட வேண்டும்? என்ன காரணம்? என்ற கேள்வியும் சந்தேகமும் பரவலாக எழுந்துள்ளது. சசிகலாவை கடைசி வரை நம்பி ஏமாந்து நிற்கிறார் டிடிவி தினகரன். எப்படியாவது தனக்கு ஆதரவு தருவார், பிரச்சாரத்துக்கு வருவார் என்று காத்திருந்த நிலையில், இன்று தனியாகவே களம் காணும் நிலைமை தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தன்னுடைய செல்வாக்கையும் அதிமுகவுக்கு நிகராக தென்மாவட்டங்களில் நிரூபிக்க வேண்டி உள்ளது. அத்துடன் திமுகவுக்கும் ஒரு செக் வைக்க வேண்டி உள்ளது. இத்தனை சவால்கள் நிறைந்திருக்கும் நிலையில், நேற்றைய தினம் அமமுகவின் லிஸ்ட் வெளியானது. அதில் கோவில்பட்டியில் கோவில்பட்டியில் தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்?
இதற்கு ஒரு குட்டி பிளாஷ்பேக் இருக்கிறது. கடந்த முறை வார்டு தேர்தல் நடந்தது இல்லையா? அப்போது அதிமுகவை இந்த தொகுதியில் சறுக்கிவிட்டது. கயத்தாறு ஒன்றியத்தில் 16 வார்டுகள் உள்ளன. இதில், 10 வார்டுகளை அமமுக கைப்பற்றியது. இத்தனைக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் தொகுதி இது., அவர்தான் இங்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பவர். அமமுக இங்கு வெற்றி பெற்றுவிட்டது என்று தெரிந்தபோதே அதிமுக தலைமை கொந்தளித்துவிட்டது.
கடம்பூர் ராஜுவை தொடர்புகொண்டு தங்கள் அதிருப்தியையும் வெளிப்படுத்தியது. கட்சிக்கே அவமானம் என்றார்கள். ஒருவேளை அன்று திமுக ஜெயித்திருந்தால்கூட இவ்வளவு காட்டம் காட்டியிருப்பார்களா தெரியாது, ஆனால், அமமுகவிடம் தொகுதி பறிபோய்விட்டதே என்றுதான் அதிருப்தி அடைந்தனர். இதே கயத்தாறு ஒன்றியத்தில்தான் கடம்பூர் ராஜுவின் சொந்தஊர் உள்ளது. அந்த ஒன்றியத்திலும் அதிமுக மண்ணை அன்று கவ்வியதுதான் ஹைலைட். சொந்த கிராமத்திலேயே ஒரு அமைச்சர் மண்ணை கவ்வினால், சட்டமன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெறுவார் என்ற கலக்கமும் அப்போதே சூழ்ந்தது.
அமமுகவின் வெற்றிக்கும், அதிமுகவின் பீதிக்கும் மொத்த காரணம் ஒரே ஒரு நபர்தான். அவர் பெயர் மாணிக்கராஜா. டிடிவி தினகரனின் தளபதிகளில் முக்கியமானவர். கடம்பூர் இளைய ஜமீன்தார் என்று இவரை சொல்லுவார்கள். கயத்தாறு என்றாலே மாணிக்கராஜாதான். செம செல்வாக்கு உடையவர். பசை உள்ள பார்ட்டி. இவர் சொந்த ஊரும் கயத்தாறு ஒன்றியம்தான். இந்த ஒன்றியத்தின் சேர்மனாக இருப்பவர் மாணிக்கராஜாதான். டிடிவி–க்கு அவ்வளவு நெருக்கம் இவர்.“அமைச்சர் மீது தொகுதியில் அதிருப்திகள் உள்ள நிலையில், நீங்க மட்டும் இந்த தொகுயில் நின்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லி தினகரனை சம்மதிக்க வைத்து இதே தொகுதியில் நிறுத்தியது சாட்சாத் மாணிக்கராஜாதான். தன்னுடைய சொந்த செல்வாக்கு தினகரனுக்கு இருந்தாலும், மாணிக்கராஜாவின் வலுவான ஆதரவும் சேர்ந்து கிடைத்துள்ளது மிகப்பெரிய பலம் என்றும் கருதப்படுகிறது. கயத்தாறு யூனியன் ஓட்டுக்கள் அப்படியே அமமுகவுக்கு திரும்பும் என்று நம்பப்படுகிறது.
இப்போது கடம்பூர் ராஜுவுக்கு மிகப்பெரிய நெருக்கடி சூழ்ந்துள்ளது. அந்த தேர்தலில் விட்டதை இந்த தேர்தலில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மறவர் சமுதாய ஓட்டுகள், தேவேந்திர குல வேளாளர் ஓட்டுக்கள், நாயுடு சமுதாய ஓட்டுக்கள் இவருக்கு கிடைக்கும் என்றே தெரிகிறது.
அதிலும் தேவேந்திர குல வேளாளர்கள் வாக்கு வங்கியை குறி வைத்தே இந்த 3 வருட செயல்பாடுகள் இருந்ததாகவும் சொல்கிறார்கள். அதனால் இந்த தொகுதியை வெல்ல போவது அமமுகவா? அதிமுகவா? என்ற போட்டிதான் எழுந்துள்ளதே தவிர, திமுக லிஸ்ட்டிலேயே இல்லை. எனினும் ஒரு சிக்கல் இருக்கிறது.. ஆக மொத்தத்தில் இந்த தொகுதியில் ஜாதி ஓட்டுக்களை மட்டுமே நம்பி களம் இறங்குகிறார் தினகரன்.