சென்னை,
கமல், டிடிவி தினகரன், சரத்குமார், பச்சைமுத்து, சீமான், விஜயகாந்த் இவர்கள் எல்லோரும் இணைந்து மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு உள்ளதா? என்றால் நிச்சயம் வாய்ப்பு உள்ளது. சொல்ல முடியாது இன்னும் கூடுதலாக திமுக அல்லது அதிமுக அணியில் இருந்து இரண்டு கட்சிகள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
ஏனெனில் கேட்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால் கூட்டணி மாறவும் வாய்ப்புகள் உள்ளது. சட்டசபை தேர்தல் தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தலைமையில் அணிகள் உள்ளன. இவை இல்லாமல் மூன்றாவது அணி உருவாகுமா என்றால் நிச்சயம் வாய்ப்பு உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அதுவும் கமல் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கினால் இந்த தேர்தலில் அது தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. இதுவரை தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற ஒன்று ஆட்சியை பிடித்தது கிடையாது. ஏன் இதுவரை எந்த ஒரு கூட்டணியும் மெஜாரிட்டி இல்லாமல் தவித்தது கிடையாது.
தமிழகத்தில் அப்படியே ஒரு அணிக்கு தான் வெற்றி கிடைக்கும். இதுதான் கடந்த கால வரலாறு. ஆனால் இதெல்லாம் கருணாநிதி, ஜெயலலிதா உயிருடன் இருந்த போது நடந்த அரசியல். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் தனிப்பெரும் தலைவர்களாக உருவெடுத்து அதிமுக, திமுகவை வழிநடத்தி தேர்தலை சந்திக்கிறார்கள்.
இவர்கள் இருவருமே முதல்வர் வேட்பாளராக சந்திக்கும் முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்புகள் தேர்தல் அறிவிப்பு வெளியான நேற்று வரை உறுதியாக இல்லாமல் இருந்தது. ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமார். திமுக கூட்டணியில் இருந்து விலகிய பச்சமுத்து ஆகியோர் உருவாக்கிய கூட்டணி, மூன்றாவது அணியாக மாற வாய்ப்பு உள்ளது.
எப்படி என்றால், சரத்குமாரும், பச்சமுத்தும் தங்கள் கூட்டணியில் கமல்ஹாசன் இணைய வேண்டும் என்று கோரி நேரில் சந்தித்துள்ளனர். இதுபற்றி கமல் நல்ல முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. கமல்ஹசான் டிடிவி தினகரனின் அமமுக தங்களுடன் கூட்டணி வைத்தால் வரவேற்போம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர்கள் அனைவரும் இணைந்தால் மூன்றாவது அணி பெரிதாக உருவாகக்கூடும்.
இதில் சீமான், விஜயாகாந்த் ஆகியோரும் இணைந்தால் மேலும் வலிமையாக வாய்ப்பு உள்ளது. கடந்த தேர்தலில் இந்த கட்சிகள் பெற்ற வாக்குகளை எல்லாம் சேர்த்து கணக்கு பார்த்தால் நிச்சயம் 12 சதவீதத்திற்கு மேல் தாண்டும். எனவே இந்த அணி திமுக, அதிமுகவிற்கு பெரிய சவாலை கொடுககவும் வாய்ப்பு உள்ளது யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை கூட ஏற்படலாம்.
என் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இந்த மூன்றாவது அணி கமல் அல்லது டிடிவி தினகரன் அல்லது இருவர் தலைமையில் அமைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கான சூழல்கள் எப்படி அமையப்போகின்றன என்பது இன்னும் ஒருசில நாளில் தெரிந்துவிடும். ஒருவேளை டிடிவி தினகரன இணைந்தால் மூன்றாவது அணிக்கு சசிகலா ஆதரவு தருவாரா என்ற கேள்வியும் எழுகிறது. நிறைய அரசியல் திருப்பங்களை மக்கள் பார்க்க போகிறார்கள். ஏனெனில் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா..!