உத்தரகாண்டில் பனிச்சரிவு…..பாதிப்புகளை முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத் இன்று ஹெலிகாப்டரில் பறந்தபடி நேரில் ஆய்வு

உத்தரகாண்டில் பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்மந்திரி திரிவேந்திர சிங் ராவத் இன்று ஹெலிகாப்டரில் பறந்தபடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

டேராடூன்,

இமயமலையின் இயற்கை சூழலை கொண்டிருக்கும் உத்தரகாண்டில் பனிப்பிரதேசங்கள், பனிச்சிகரங்கள் என பேரழகு கொட்டிக்கிடக்கிறது.

இந்த கொள்ளை அழகே, அங்கு அடிக்கடி ஆபத்தை விளைவிக்கிறது. அப்படித்தான் நேற்றுமுன்தினமும் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி உலகையே அதிர வைத்துவிட்டது. அங்குள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி நேற்று முன்தினம் காலையில் உடைந்தது.

இதனால் அலெக்நந்தா மற்றும் தாலி கங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிலும் அலெக்நந்தா நதியில் பெரும் பிரளயமே ஏற்பட்டது. சில மணித்துளிகளில் பல அடிக்கு உயர்ந்த நீர் மட்டத்தால் இரு கரைகளும் தெரியாத அளவுக்கு பெருவெள்ளம் கரைபுரண்டது.

இந்த திடீர் வெள்ளத்தை எதிர்பாராத கரையோர மக்கள் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டனர். இதில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் 150 பேர் வரை பலியானதாக தகவல் வெளியானது. இது ஒருபுறம் இருக்க, அலெக்நந்தா மற்றும் தாலி கங்கா ஆகிய 2 நதிகளின் தண்ணீரை கொண்டு ரிஷிகங்கா நீர் மின்திட்டம் ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்த நீர்மின் நிலையம் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாயமாகி உள்ளனர். இதைப்போல தபோவன்விஷ்ணுகாட் அனல் மின் நிலையத்திலும் இந்த பெரு வெள்ளம் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.

அங்குள்ள 2 சுரங்கங்கள் பெருத்த சேதமடைந்தன. சேறு, குப்பைகள் மற்றும் வண்டல் போன்றவற்றால் சுரங்கங்கள் மூடிக்கொண்டன. இதனால் அந்த சுரங்கங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள்ளே சிக்கிக் கொண்டனர்.

அவர்களின் நிலைமை குறித்து இன்னும் தெரியவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 26 உடல்கள் நேற்று இரவு வரை மீட்கப்பட்டன. இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர்.

அவர்களில் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடவும், சுரங்கங்களில் சிக்கியிருப்போரை மீட்கவும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக இந்தோதிபெத் எல்லை பாதுகாப்பு படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், மருத்துவக்குழு அடங்கிய ராணுவ வீரர்கள் மற்றும் மோப்ப நாய் படைப்பிரிவு என பெரும் படையே களத்தில் இறக்கப்பட்டு உள்ளன. நூற்றுக்கணக்கான வீரர்கள் அடங்கிய இந்த படையினர் நேற்று முன்தினம் முதல் இரவுபகலாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் பலனாக 27 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளதாக மாநில அவசரகால மையம் தெரிவித்து உள்ளது. இதில் 12 பேர் தபோவன்விஷ்ணுகாட் திட்ட தளத்தில் உள்ள சிறிய சுரங்கத்தில் இருந்தும், 15 பேர் ரிஷி கங்கா தளத்தில் இருந்தும் மீட்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே தபோவன்விஷ்ணுகாட் தளத்தில் உள்ள பெரிய சுரங்கத்தில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்னும் சிக்கி இருக்கின்றனர். 1500 மீ. நீளமுள்ள இந்த சுரங்கத்துக்கு ஒரேயொரு நுழைவாயில் மட்டுமே இருப்பதாலும், சுரங்கம் சற்றே வளைந்து இருப்பதாலும் இடிபாடுகளை நீக்குதல் மற்றும் மீட்புப்பணிகள் மிகவும் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சுரங்கத்தில் சுமார் 100 மீ. தூரத்துக்கு சேறு, குப்பை மற்றும் சகதியை மீட்புக்குழுவினர் அகற்றி விட்டனர். இன்னும் சுமார் 100 மீ. அளவுக்கு சகதி மற்றும் குப்பைகளால் சூழ்ந்துள்ளது. எனவே அவற்றை அகற்றும் பணிகளில் வீரர்கள் ஓய்வின்றி ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமோலி மாவட்டத்தில் நேற்று திடீரென முன்தினம் பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

Translate »
error: Content is protected !!