அதிமுக அரசு அரசியல் ஆதாயத்திற்காகவே திமுக பழி போடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்று மு.க.ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல்- மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக அரசின் செயல்பாடுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக, மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் விவகாரத்தில், அதிமுக அரசை மிகக் கடுமையாகவே சாடி வருகிறார். மேலும் மசோதாவுக்கு ஒப்புதல் தர 3 , 4 வாரங்கள் தேவைப்படும் என தம்மை சந்தித்த அமைச்சர்களிடம் கூறியதாக ஆளுநர் தெரிவித்ததை, அரசு மறைத்தது ஏன்? என்று, மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் பேசுவதாக, முதல்வர் பழனிச்சாமி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரக்கோரி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிச்சாமியின் அறிக்கைக்கு பதிலடி தந்தார். எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்ய முடியும் கேள்வி எழுப்பினார்.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்த போது தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை. எடப்பாடி ஆட்சியில் தான் அனுமதி தரப்பட்டது என்ற மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.