சென்னை,
போற இடமெல்லாம் ஒரே ஒரு செங்கல் எடுத்துட்டு போறரே. அது என்னன்னு கவனிச்சீங்களா? 2015-ல் இருந்து மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என்ற பேச்சு உள்ளது.. தமிழ்நாட்டுடன் சேர்த்து மொத்தம் 4 மாநிலங்களில் இந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மற்ற 3 மாநிலங்களில் கட்டுமானப்பணி தொடங்கி, அது முடியும் தருவாயுக்கே வந்துவிட்டது.. ஆனால், நமக்கு இன்னும் அதற்கான அறிகுறியே தென்படவில்லை.
எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை.. அரசாணை வெளியிடவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.. திட்ட அறிக்கையும் ரெடியாகவில்லை.. நிலம் ஒப்படைக்கப்படவில்லை. என பல்வேறு புகார்களுக்கு பதிலும் இல்லை… ஒருகட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை,
நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை பதிலளிக்கவும் இந்த விவகாரம் மீண்டும் சலசலப்பை தந்தது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான இடம் தேர்வில் அதிமுக– பாஜக இடையே நீடிக்கும் திரைமறைவு அரசியல் மோதலே இந்த தாமதத்துக்கு காரணம் என்று ஒரு பேச்சும் உள்ளது.. எனினும், எய்ம்ஸ் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. “எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தமிழக அரசு பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்துள்ளது” என்று ஸ்டாலின்கூட ஒருமுறை அறிக்கை விடுத்திருந்தார்.
இப்போது தேர்தல் களம் தகித்து வரும் நிலையில், உதயநிதி இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். ஆனால், மற்றவர்களை போல சீரியஸாக விவாதிக்காமல், குற்றம் சொல்லாமல், அவரது பாணியிலேயே பாஜகவை குற்றம் சாட்டி வருகிறார்.எங்கெல்லாம் உதயநிதி செல்கிறாரோ அங்கெல்லாம் ஒரு செங்கல்லை எடுத்து போகிறார். அதுவும் ஒரே ஒரு செங்கல். பொதுமக்களிடம் பேசி கொண்டே இருப்பவர், திடீரென இந்த ஒத்த செங்கல்லை தூக்கி காட்டுகிறார்..
என்ன தம்பி @Udhaystalin இப்படிப்பண்றீங்களே தம்பி. மதுரைல இருந்த ஒரு செங்கல்லையும் நீங்க தூக்கிட்டு வந்துட்டா மோடி எய்ம்ஸ்னு இனி எதைத்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டுவார்! pic.twitter.com/wVplHxZPeE
— Jothimani (@jothims) March 24, 2021
அதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டாமல் பாஜக ஏமாற்றி விட்டதுன்னு ரொம்ப சிம்பிளா மக்களுக்குப் புரிய வைத்து வருகிறார். நீட்டி முழக்க எல்லாம் பேசுவதில்லை. ஒரு செங்கல்தான் எல்லாம்..! இதைதான் எம்பி ஜோதிமணி தன்னுடைய ட்வீட்டிலும் பதிய விட்டுள்ளார்.. “என்ன தம்பி இப்படிப்பண்றீங்களே.. மதுரைல இருந்த ஒரு செங்கல்லையும் நீங்க தூக்கிட்டு வந்துட்டா மோடி எய்ம்ஸ்னு இனி எதைத்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டுவார்!” என்று கலாய்த்துள்ளார். ஆனால், உதயநிதியின் இந்த அதிரடியை பாஜகவே எதிர்பார்க்கவில்லை.
அதிமுகவும் அதற்கு மேல் எதிர்பார்க்கவில்லை. “செங்கல் டேக்டிக்ஸ்” என்றே இதை சொல்லலாம். இந்த விஷயத்தில் ஸ்டாலினை விட ஒரு படி மேலே போய்விட்டார் உதயநிதி.. இதுவே ஸ்டாலினாக இருந்தால், பாஜக அரசை குறை சொல்லி நீளமாக பேசுவார். அல்லது ஒரு அறிக்கை விடுவார். ஆனால், உதயநிதி அப்படி இல்லை.. ஷாட் & கிரிஸ்ப்பி முறை எனலாம்.. நல்லா புரியும்படியாக, தெளிவாக, சிம்பிளா, எதார்த்தமாக பேசிவருகிறார். அதனால்தான், அதை மக்களும் ரசிச்சு கேட்டு கொண்டிருக்கிறார்கள். ஒன்னுமில்லை, உதயநிதி ஒரு செங்கலை கையில் தூக்கியதுமே சிரிக்கறாங்க, என்றால் பார்த்துக்குங்களேன்!