ஏன் அனைத்து முதலவர் வேட்பாளர்களும் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்..?

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து முதலமைச்சர் வேட்பாளர்களும் நேற்று ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக களமிறங்குகிறது. அதேநேரம் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக களமிறங்குகிறது, இது தவிர கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

வழக்கத்துக்கு மாறாக இந்த முறை தமிழ்நாட்டில் ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல திமுக மு ஸ்டலாின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் கமல்ஹாசனும், அமமுகதேமுதிக கூட்டணியில் டிடிவி தினகரனும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 234 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தற்போதைய முதல்வரும் அதிமுக முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி தொகுதியில் அவர் போட்டியிடுவது ஏழாவது முறையாகும்.

திமுகவின் முதல்வர் வேட்பளாரன மு ஸ்டாலின் நேற்று சென்னை கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடும் மு ஸ்டாலின் அயனாவரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கமல் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அவர் ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் கோவை தெற்கு தொகுதியில் நேற்று மதியம் மதியம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதேபோல திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்குள்ள மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மேலும், கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்துக் களமிறங்கும் டிடிவி தினகரன் கோவில்பட்டி சப்கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

இப்படி முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று நல்ல நாள் என்பதால் சென்டிமென்டாக அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர முதல்வர் வேட்பளாரக அறிவிக்கப்பட்டுள்ள அனைவரும் நட்சத்திர தலைவர்கள். மற்ற தொகுதியில் போட்டியிடும் பிரபலம் குறைந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக இவர்கள் தான் பிரசாரம் செய்ய வேண்டும். எனவே நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட, தமிழகம் முழுவதும் இந்தத் தலைவர்கள் தங்கள் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.

 

Translate »
error: Content is protected !!