ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் மற்றும் கட்டாக் நகரங்களில் இன்று இரவு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெரிய கூட்டத்தைத் தவிர்க்கும் விதமாக ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் மற்றும் கட்டாக் நகரங்களில் இன்று இரவு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று போலீஸ் கமிஷனர் சுதான்சு சாரங்கி தெரிவித்துள்ளார். இதன்படி அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நடமாட்டம் போன்றவை இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை தடை செய்யப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஒடிசாவில் புதிதாக 315 கொரோனா பாதிப்புகளும், 328 பேர் குணமாகி உள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதிய 315 வழக்குகள் மாநிலத்தின் 30 மாவட்டங்களில் 27 ல் இருந்து பதிவாகியுள்ளன, இதில் 181 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறை அறிக்கையின்படி, மாநிலத்தில் செயலில் உள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,592 ஆக உள்ளது. ஒரே நாளில் மேலும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 1,873 ஐ எட்டியுள்ளது. இதன் மூலம், ஒடிசா இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,25,103 பேராகவும், 3,29,621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.