வெங்காயம் விலை கிடுகிடுவென்று அதிகரித்து வரும் நிலையில், பசுமை பண்ணை கடைகள் மூலம் ஒருகிலோ ரூ. 45-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா என்ற பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏராளமான பயிர் சாகுபடி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக, வெங்காயம் அழுகி, அதன் உற்பத்தி குறைந்து, அதன் விலையேற்றத்திற்கு காரணமாகி இருக்கிறது.
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வெங்காயம் வரத்து வெகுவாய குறைந்துள்ளது. திருச்சி வெங்காயம் மண்டிக்குத் தினசரி பெரிய வெங்காயம் 300 டன் என்பதற்கு மாறாக தற்போது 200 டன் என்றளவில் மட்டுமே வெங்காயம் வரத்துள்ளது.
அதேபோல், சென்னை கோயம்பேடு சந்தைக்கும் வரத்து குறைந்து, வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. தற்போது சில்லறை விலையில் வெங்காயம் கிலோ ரூ.100 தொட்டிருக்கும் நிலையில், பண்டிகைக்காலம் என்பதால் அடுத்த சில வாரங்களில் இது ரூ.130ஐ தொடலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி வெங்காயத்தைக் கொள்முதல் செய்து பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கூட்டுறவுத்துறை சார்பில் பசுமை பண்ணை கடைகள் மூலம் நாளை முதல் சென்னையிலும், நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45 என்ற விலையில் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பசுமைப் பண்ணை கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயம் பெற்று பயன்பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.