சென்னை,
கொரோனாவால் தொழில்கள் நசிந்துபோயுள்ள சூழ்நிலையில், மக்களுக்கு உதவும் வகையில், அன்றாட விலைவாசியை குறைக்கும் வகையில் சில திட்டங்களை முன்மொழிந்துள்ளது திமுக தேர்தல் அறிக்கை. ஆம்.. மக்கள் கையில் பணப் புழக்கம் இல்லாத இந்த காலகட்டத்தில் அவர்களை கூல் செய்வது போல அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது திமுக தேர்தல் அறிக்கை.
ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஏழை, எளியவர்களுக்கு தினசரி செலவை குறைக்கும் வகையிலான திட்டங்கள் என்ன சொல்லப்பட்டுள்ளது? இதோ பாருங்கள்: பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்கிறது தேர்தல் அறிக்கை. அதாவது தமிழக அரசு, வரியை குறைத்து எரிபொருள் விலையை குறைக்கும் என்று சொல்லியுள்ளது.
இது மட்டுமல்ல சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதாவது, இப்போது மக்கள் புலம்பும் இரு விலைவாசி ஏற்றங்களையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
அன்றாட பயன்பாட்டில் இடம் பெறும் மற்றொரு விஷயம் பால். அரசின், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். ரேசன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்றும் இனிப்பு வாக்குறுதி தந்துள்ளார்.
கொரோனா காலத்தில் தவிக்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் உதவும் வகையில், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதியோர் & ஆதரவற்றோர் உதவித்தொகை ரூ.1500 ஆக அதிகரிக்கப்படும் என்பதும் ஏழைகளுக்கான அறிவிப்பு.
இது மட்டுமில்லை. சொத்துவரி அதிகரிக்க படாது என்று கூறி பால்வார்த்துள்ளது திமுக தேர்தல் அறிக்கை. கூட்டுறவு நகை கடன் 5 பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி என்று கூறியுள்ளது ஏழை, எளியவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திதான். ஆனால் இதற்கெல்லாம் மாநில அரசிடம் நிதி வசதி இருக்கிறதா என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் பதில் இல்லை.